மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் - தாமரைச்செல்வி தம்பதி. இவர்களது மூத்த மகள் அபிநயா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் மூலமாக படித்துக் கொண்டிருந்தார். கடந்த வாரம் மாணவியின் விருப்பமின்றி தாய்மாமனுக்கு திருமணம் செய்வதாக பெற்றோர்கள் முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
மாணவி தனக்கு விருப்பமின்றி திருமண முயற்சிகள் நடைபெறுவதாகவும், தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி காவல்துறை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினர் மாணவியின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். மாணவிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மனநல ஆலோசனை வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 15) தனது வீட்டிற்கு திரும்பிய மாணவி அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்ட, பெற்றோர் அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மாணவி இறந்துவிட்டதாகக் கூறினார்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மாணவியின் உடலை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவியின் கையை பிடித்து இழுத்த இளைஞர் : ஓட ஓட விரட்டி கொலை செய்த தந்தை!