கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி தினகரன் நாளிதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தென்மாவட்டத்தில் திமுகமுன்னாள்தலைவர் கருணாநிதியின் மகனான அழகிரிக்கு செல்வாக்கு குறைந்திருப்பதாகத் தெரிவித்தது. இதனையடுத்து மு.க.அழகிரியின் ஆதரவாளரான அட்டாக் பாண்டி உள்ளிட்ட சிலர் மதுரையில் உள்ள தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் இரண்டு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி, ஏடிஎஸ்பி ராஜாராமன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த 2009ஆம் ஆண்டு வழக்கில் இருந்த அனைவரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சிபிஐ தரப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது .
மேலும், தினகரன் நாளிதழ் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஊழியர் வினோத்தின் தாயார் பூங்கொடியும் சீராய்வு மனுவை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அட்டாக்பாண்டி, ஏடிஎஸ்பி ராஜாராம், ஆரோக்ய பிரபு, விஜய் பாண்டி, கந்தசாமி, ராமையாபாண்டியன், சுதாகரன், துரைமுருகன், மாணிக்பாட்ஷா, ரூபன் ஆகிய ஒன்பது பேருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அட்டாக்பாண்டி, கந்தசாமி, ஆகியோர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்ஆரோக்கிய பிரபு, ௹பன், ராமையா பாண்டி, மாலிக் பாட்ஷா, சுதாகர் உள்ளிட்ட ஐந்து பேர் சரணடைந்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டனர்.