மதுரை: விருதுநகர் மாவட்டத்தில், மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியிலிருந்து கூடைப் பந்தாட்ட அணி வீராங்கனைகள் சென்றனர். இந்த அணியின் தலைவரான சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அபிநந்தனா (15) என்ற பள்ளி மாணவியும் கலந்து கொண்டார்.
மாணவி அபிநந்தனா போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டபோது திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தான் போட்டியில் கலந்து கொள்வதாகக் கூறி சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று போட்டி முடிவடைந்த நிலையில் இன்று (மே 22) அதிகாலை விருதுநகரில் இருந்து புறப்பட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு மாணவி தனது சக நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சென்னை புறப்பட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ரயில் நிலையம் முன்பாக மயக்கம் வருவதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே மயங்கிய மாணவி அபிநந்தனா பயிற்சியாளரின் மடியில் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த அவசர ஊர்தி ஊழியர்கள் அபிநந்தனாவின் உடலைப் பரிசோதித்தபோது அபிநந்தனா உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அபிநந்தனாவுடன் வந்த மாணவிகள் சென்னைக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த மாணவி அபிநந்தனாவின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து திலகர் திடல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சென்றுவிட்டு, சொந்த ஊர் புறப்பட்ட மாணவி திடீரென ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: இப்ப நான் தான் டிராபிக் போலீஸ்..! நடுரோட்டில் போதை ஆசாமி ரகளை