மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாலையோர வியாபாரியான மூதாட்டி கருப்பாயி மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தைச் சுற்றி எத்தனைக் கடைகள் யார் யார் பெயர்களில் உள்ளன என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மூன்றாண்டுகள் ஆகியும் எவ்வித பதிலும் மாநகராட்சி சார்பில் பதில் எதுவும் அளிக்கப்படாததால், மாநில தகவல் ஆணையத்துக்கு புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையர் முத்துராஜ் தலைமையில் இது குறித்து விசாரணை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணையர், மூன்றாண்டுகளாக தகவல் தராமல் இழுத்தடித்து வந்த மாநகராட்சி உதவி ஆணையருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், மூதாட்டி கருப்பாயி கேட்ட கேள்விக்கு உடனடியாக பதில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மூதாட்டி ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநகராட்சி உதவி ஆணையரை அபராதம் கட்டவைத்த சம்பவம் அப்பகுதி மக்களால் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.