இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நாட்டுப்பற்றை ஊக்குவிக்க உதவும் வகையில் இந்தியா ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பதக்கங்கள் கண்காட்சி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்றுவருகிறது. இதனைப் பொதுமக்களும், பள்ளி-கல்லூரி மாணவ மாணவியரும் பார்வையிட்டுவருகின்றனர்.
இது குறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் கூறுகையில், "இக்கண்காட்சியில் வீர பதக்கங்கள் என்ற தலைப்பில் 1880ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையுள்ள 69 பதக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவின் 1880ஆம் ஆண்டைச் சேர்ந்த பதக்கம்தான் மிகப் பழமையானது. மகாராணியின் உருவமில்லாமல் பதிக்கப்பட்ட முதல் பதக்கம்" என்றார்.
இந்தக் கண்காட்சியில் முதல், இரண்டாம் உலகப்போர், கார்கில் யுத்தம், டையூ டாமன் பகுதிகளில் ஆட்சிபுரிந்த போர்த்துக்கீசியர்களை 36 மணி நேரத்தில் இந்திய பாதுகாப்புப்படை மீட்டபோது வழங்கப்பட்ட பதக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி சவுதி அரேபியா, தென்கொரியா, இந்தோ-சீனா நாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களும் ஐநா வழங்கிய விருதுகளும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அரசு அருங்காட்சியகம் இணைந்து நடத்தியது.