கரோனா தொற்றின் தீவிர பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் பொதுமக்களுக்கு உதவிகளைச் செய்துவருகின்றன.
இதைத் தொடர்ந்து, மதுரை ஆயுதப்படை காவல்துறையினர் தங்களது சிறப்பு உணவு வாகனத்தின் மூலமாக தாங்களே தயாரித்த உணவு பொட்டலங்களை நகர் முழுவதும் பயணித்து பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இன்று விநியோகம் செய்தனர்.
இது குறித்து ஆயுதப்படை ஆறாம் படைப்பிரிவின் ஏடிஎஸ்பி முருகேசன் கூறுகையில், "ஆயுதப்படை காவல் துறையினர் அளித்த ஒருங்கிணைந்த நிதி உதவியின் மூலமாக மதுரை மக்களுக்கு உணவு விநியோகத்தை இன்றிலிருந்து தொடங்குகிறோம். நாள்தோறும் 500 பொட்டலங்கள் விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். கூடுதலாகத் தேவைப்படும் பட்சத்தில் ஆயிரம் பொட்டலங்கள் வரை தயாரித்து வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம். தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், தண்ணீர், ஊறுகாய், கூட்டு என வழங்கி வருகிறோம்.
ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர் என அனைவரும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஊரடங்கு காலம் வரை இந்தச் சேவை ஆயுதப்படை காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளியை விமர்சித்து டி.எம்.கிருஷ்ணா ட்வீட்