மதுரை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கையின் போது, தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் விரவியிருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 நாள்களுக்கு களப்பயணத்துடன் உண்டு உறைவிடப் பயிற்சி வழங்க இருப்பதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: Elephant Whisperers Hero: "ஒரே நாளுல எங்கள பிரிச்சு விட்டுட்டாங்க" யானைகள் தகப்பனின் கண்ணீர் கதை.
இப்பயிற்சி ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1000 ஆசிரியர்களுக்கு சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, வேலூர், கோவை மற்றும் தர்மபுரி ஆகிய 9 மண்டலங்களில் பயிற்சி நடத்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சியின் முதல் சுற்று மதுரை மண்டலத்தில் கீழடியில் 06.03.2023 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
இதில் தொல்லியல் ஓர் அறிமுகம், பழைய, புதிய, இரும்புக் காலப் பண்பாடு, தமிழ்நாட்டு அகழாய்வுகள், நாணயவியல், கல்வெட்டியல் ஓர் அறிமுகம், தமிழி கல்வெட்டுகள், நடுகற்கள், பல்லவர், பாண்டியர், சோழர் கால கலை மற்றும் கட்டடக்கலை, செப்பேடுகள், பாறை ஓவியங்கள், தமிழ்க் கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அமைத்தல் போன்றவை பயிற்சியில் இடம் பெற்றன. பயிற்சியை பூங்குன்றன், வேதாசலம், ராஜவேலு, இனியன், செந்தீ நடராஜன், கருராஜேந்திரன், ஆறுமுக சீத்தாராமன், ராமநாதபுரம் ராஜகுரு, புதுக்கோட்டை மணிகண்டன், சிவகங்கை காளிராசா, பாலாபாரதி, சிவகளை மாணிக்கம் ஆகிய தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்தினார்கள்.
களப்பயணமாக கீழடி, வரிச்சியூர் குன்னத்தூர், கீழக்குயில்குடி, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள தொல்லியல் சின்னங்களை ஆசிரியர்கள் பார்த்து அறிந்து கொண்டனர். இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி மாணவர்களுக்கு தொல்லியல் குறித்து கற்றுத்தர உள்ளார்கள். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வழிகாட்டுதலில், இணை இயக்குநர் வைகுமார் மேலாண்மையின் கீழ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை மதுரை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி, துணை முதல்வர் ராம்ராஜ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் பிரபாகரன் உள்ளிட்டோர் செய்தனர்.
இதையும் படிங்க: அந்தியோதயா ரயில் திருநெல்வேலி வரை இயக்கம்