மதுரை மாவட்டம் சூலப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட உலைப்பட்டியின் மேற்கு மலை அடிவாரத்தில் கி.மு. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உருக்கும் உலை, கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு பொருள்கள் விவசாயி ஒருவருக்கு கிடைத்துள்ளது.
இதை அவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைத்துள்ளார். இதனையடுத்து இன்று(ஜூலை 28) அப்பகுதிக்கு ஆய்வுக்காக வந்திருந்த பேரையூர் வட்டாட்சியர், மாவட்ட அலுவலர்கள் அந்த விவசாயிடம் இருந்து அப்பொருட்களை மீட்டனர்.
அதில் குறிப்பாக சங்க காலத்தைச் சேர்ந்த பானையோடுகள், எலும்புத் துண்டுகள், சூதுபவள மணிகள், இரும்பாலான பொருள்கள் ஆகியவை இருந்தன.
பின்னர் அவை அனைத்தும் பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து சூலப்புரத்தைச் சேர்ந்த காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முனைவர் முருகேசன் கூறுகையில், 'மிகப் பழமையான இந்தத் தொல்லியல் மேட்டில் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு தொல்லியல் துறை உடனடியாகத் தலையிட்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க முன்வர வேண்டும். இங்குள்ள அனைத்து விதமான தொல்லியல் சின்னங்களைக் காப்பாற்றுவது மிக அவசியம்' என்றார்.
இதையும் படிங்க: சிவகளையில் இரும்பு உருக்கு ஆலை கழிவு கண்டுபிடிப்பு!