மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் பணிகளில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கும் திட்டத்தை மதுரை அருகே கருப்பாயூரணியில் வைத்து வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மொத்தம் 3,894 பயனாளிகளுக்கு 2.31 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துப் பெட்டகம், கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, "முன்களப் பணியாளர்களுக்காக பல்வேறு திட்டங்கள் திமுக காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. கரோனாவை ஒழிக்க மேற்கொண்ட தீவிர முயற்சியால் மதுரை மாவட்டத்தில் 1500ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது 500ஆகக் குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில் தொற்று பாதிப்பைக் கண்காணிக்க பெண்களைக் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கரோனோ முதல் அலையின்போது ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்கள் ஓராண்டு ஒப்பந்த காலம் நிறைவுபெறும் முன்பே பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பணி வழங்கக்கோரி ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 29 ஆயுஷ் மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட நிர்வாகமும் அமைச்சரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.