செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த எஸ்.சேகர், இவர் மோசடி வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று மதுரை குசவங்குண்டு பகுதியைச் சேர்ந்த எஸ்.உதயகுமார் என்பவர் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதில், 'நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். அரசு வேலைக்கு செல்ல நண்பர் மூலமாக செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர், தான் சென்னை தலைமை செயலகத்தில் வேலை பார்ப்பதாகவும், எனக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றுபவர்களை தெரியும். உங்களுக்கு அரசு வேலை வேண்டும் என்றால் முன்பணமாக கொடுத்தால் வாங்கி தருவதாக கூறினார். இதையடுத்து, நான் உள்பட6 பேரிடம் மொத்தம் ரூ.60லட்சம் அவரிடம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக்கொண்டு எங்களுக்கு வேலை வாங்கி தராமல் இழுதடித்து வந்தார். இதுகுறித்து 2014ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தோம், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நான்கு ஆண்டுகள் ஆகியும் சேகர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அவர் முன்ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது' என மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.