தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக கரோனா வைரஸ் சென்னையை போல் வேகமாக பரவியது. தினம்தோறும் சராசரியாக 400 முதல் 500 புதிய கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதையடுத்து, மதுரையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன.
கரோனாவுக்கு எதிரான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் மதுரையில் கட்டுப்பாடு இல்லாமல் பரவிய கரோனா தொற்று தற்போது குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதி முதல் கரோனா பரவல் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 21) மேலும் 86 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 237ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 331ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், சிகிச்சையில் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 138 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 903 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் பாதிப்பு ஏற்படுவோரை காட்டிலும், இந்த நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிளாஸ்மா தானம் மூலமாக 7 பேர் இதுவரை குணமாகி உள்ளனர்.
அதே நேரத்தில் தினமும் சாரசரியாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஸ்புட்னிக் - வி உற்பத்தியில் இந்தியாவை நாடும் ரஷ்யா!