ETV Bharat / state

'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை; 'மா' மதுரையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்! - tamizhi insriptions

கிண்ணிமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள 'ஏகன் ஆதன் கோட்டம்' என்ற தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கல்தூண், தமிழர் வரலாற்றில் மிக முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்துவதுடன், தமிழர்களின் பண்பாடு, சமய வழிபாட்டு முறையையும் உலகுக்கு எடுத்துரைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை

author img

By

Published : Jul 21, 2020, 1:12 PM IST

தொல் பொருள்களைக் கண்டறிவதன் அவசியம் என்ன?

நாம் பேசும் தமிழ் மொழி யாரால் தோற்றுவிக்கப்பட்டது, எந்தக் காலகட்டத்தில் தோன்றியிருக்கக்கூடும், எப்படி அம்மொழி எழுத்துவடிவம் பெற்றது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதுக்குள் அவ்வப்போது எழும். அக்கேள்விகளின் முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்ப்பது, பழங்கால மக்களின் தொல்லியல் எச்சங்களே. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஆதிச்சநல்லூர், கீழடி ஆகிய பகுதிகளில் கிடைத்த பொருள்களிலும், குகைக் கல்வெட்டுகளிலும் நடுகல்லிலும் பொறிக்கப்பட்ட எழுத்துகளே தமிழின் தொன்மையை நமக்கு உணர்த்துகின்றன; தமிழர் வரலாற்றையும் பறைசாற்றுகின்றன.

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி' என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் குறிப்பிடுவதை வைத்தே அறுதியிட்டுக் கூற முடியும் தமிழர் நாகரிகம்தான் பழம்பெரும் நாகரிகம் என்று. இருப்பினும், தமிழ் மொழியின் தொன்மையை நிரூபணம் செய்வதற்கு தொல் பொருள்களின் கண்டுபிடிப்பு மிக அவசியம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

'தொல்லியல் மாநகர்' மதுரை

தமிழ்நாட்டில் சில இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகள் தமிழின் தொன்மைக்கு நியாயம் சேர்க்கும். மதுரை மாநகரில் இருக்கும் ஏராளமான இடங்களே அதற்குச் சான்று. திருப்பரங்குன்றம், அழகர்மலை, கீழவளவு, முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தற்போது அந்த வரிசையில் கிண்ணிமங்கலம் கிராமம் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. பார்ப்பதற்கே அரிதான தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்தூணை நமக்கு அருளி, தனக்கும் தமிழ் மொழிக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையை வழங்கியிருக்கிறது அக்கிராமம்.

பார்ப்பதற்கே அரிதான 'தமிழி' எழுத்துகளைக் கொண்ட கல்தூண்:

மதுரை-தேனி நெடுஞ்சாலையில் செக்கானூரணி அருகே அமைந்துள்ள கிராமம்தான் கிண்ணிமங்கலம். இங்கு மிகவும் பழமைவாய்ந்த ஏக நாத சுவாமி மடம் இருக்கின்றது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இந்த மடம் மிக முக்கிய வழிபாட்டுத்தலம். மடத்தின் கருவறையில் ஆதிகுரு ஏகநாதரின் ஜீவசமாதி இருப்பதால்தான், அங்கு எழுப்பப்பட்டுள்ள லிங்கத்தையும் மக்கள் அதே பெயரில் அழைத்துவருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு தொன்மைவாய்ந்த இந்த மடத்தின் வளாகத்தில் சிதிலமடைந்த நிலையில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பழங்கால கல் தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பாறை ஓவியங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையில், ராஜவேல், ஆனந்தன் ஆகியோர் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கல்தூணின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து காந்திராஜனிடம் கேட்டோம். மிக தொன்மையான பல்வேறு கல்வெட்டுகள் மதுரையில்தான் கிடைத்துள்ளன என்று விவரிக்கும் அவர், "தமிழ்நாட்டில் 40க்கும் அதிகமான இடங்களில் தமிழ் பிராமி என்று அழைக்கப்படுகிற தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதில் பெரும்பாலானவை மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள்தான்.

கல்தூணின் காலம்; கூறும் வரலாற்றுத் தகவல்கள் என்ன?

ஆண்டிப்பட்டி அருகே உள்ள புலிமான் கோம்பை, தாதப்பட்டி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற நடுக்கற்களில்தான் இதுபோன்ற தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவற்றிற்கு இணையான காலத்தில்தான் (கி.மு. 6 - கி.மு. 2) தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் கல்தூணிலும் தமிழி எழுத்து பொறிக்கப்படிருக்க வேண்டும். ஏனென்றில், மிக நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வட்ட எழுத்துகள் (தமிழ் எழுத்து உருவாவதற்கு முன் எழுதப்பட்ட எழுத்து வடிவம்) பொறிக்கப்பட்டுள்ளன. கூடுதல் ஆராய்ச்சிகளில் எழுத்துகள் எந்தக் காலத்தில் பொறிக்கப்பட்டன என்பது தெரியவரும்" என்கிறார்.

சங்ககால தமிழர்களின் கட்டடக் கலை, வாழ்வியல், சமயம், மரபு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் இக்கல்தூண் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. மேலும், தமிழர்களின் புவியியல் அறிவின் முக்கியத்துவத்தைக் கூறும் முதல் கல்வெட்டு ஆதாரமாக இது கருதப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் காணப்பட்ட 'கோட்டம்' என்ற சொல் இக்கல்தூணிலும் காணப்பெற்றதுதான், அதன் சிறப்பு என்கிறார் காந்திராஜன்.

'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை

'ஏகன் ஆதன் கோட்டம்' என்பதின் பொருள் யாது?

கல்தூணில் இடம்பெற்றுள்ள 'ஏகன் ஆதன் கோட்டம்' என்ற மூன்று சொற்களுக்கும் தனித்தனியே விளக்கமளிக்கிறார் அவர். " 'ஏகன்' என்ற சொல் செல்வ செழிப்போடு வாழ்ந்த அரசனைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

அதேபோன்று 'ஆதன்' என்ற சொல் சங்ககாலத்தில் வாழ்ந்த குறுநில அரசர்களின் பெயர்களைக் குறிக்கிறது. சேரலாதன், நெடுஞ்சேரலாதன் என்ற பெயர் கொண்ட அரசர்களின் பெயர்களை உதாரணமாகச் சொல்லலாம். தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கிடைத்த தொல் பொருள்களிலும், அண்மையில் கீழடி அகழாய்விலும் இந்தச் சொல் காணக் கிடைத்திருக்கிறது.

இதற்கு வேறு ஒரு அர்த்தமும் கூறப்படுகிறது. ஆநிரை என்றழைக்கப்படும் பசு மாடுகளை அதிகமாகக் கொண்ட முல்லை நிலத்தைச் சேர்ந்தவன் என்ற காரணப் பெயரிலும் இச்சொல் வழங்கப்படுகிறது. இவையனைத்தையும் வைத்துப் பார்க்கையில் இந்த எழுத்துகள் ஏகன் என்ற அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்ற பொருளை உணர்த்துகின்றன" என்று விவரித்தார்.

மடத்தின் பழமையை உணர்த்தும் மற்றொரு கல்வெட்டு:

இதேபோன்று ஐந்து எழுத்துகள் பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு கிடைத்திருப்பதாகவும், அந்த எழுத்துகள் ஏகநாத சுவாமி மடம் ஆயிரம் ஆண்டு பழமையானது என்பதை நிரூபிப்பதாகவும் ஆச்சரியமூட்டுகிறார். மடத்தின் பரிணாமத்தை அங்கு கிடைக்கும் கல்வெட்டுகள், பானை ஓடுகள், நாணயங்கள் உள்ளிட்டவை உறுதிசெய்வதாகவும் அவர் கூறுகிறார்.

கலைகளை வளர்த்தெடுத்த ஏகநாத சுவாமி மடம்:

ஏகநாத சுவாமி மடத்தின் தற்போதைய தலைவராக உள்ள அருளானந்தம் கூறுகையில், "இம்மடத்தை ஆதி குருவின் மடம் என்றே நாங்கள் அழைக்கிறோம். ஏகநாத சுவாமி ஜீவசமாதி மடத்தின் 67ஆவது தலைமுறையாக தற்போது நான் தலைவராக இருக்கிறேன்.

இங்கு தொன்றுதொட்டு 16 கலைகள் மக்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ளன. தமிழ் மொழியை இலக்கணச் சுத்தமாகக் கற்பித்தல், போர்க் கலைப் பயிற்சி, மருத்துவம், வானவியல் சாஸ்திரம், வேதியியல், இயற்பியல், நடனம், சங்ககால தமிழ்ப் பண்கள் ஆகிய கலைகள் இங்கு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன" என்றார். இவர் தற்போது, மருத்துவ, ஜோதிட கல்விப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

'தமிழி' எழுத்து ஓர் அறிமுகம்:

இப்போது நாம் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்துகள் ஏதோ ஒரே நாள் இரவில் உருவானவை அல்ல. பல்வேறு வளரச்சிப் படிநிலைகளைத் தாண்டி தற்போதுதான் நிலையான ஒரு வடிவத்தைப் பெற்றுள்ளன.

ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழை எழுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவத்தைத்தான் தொல்லியல் அறிஞர்கள் 'தமிழி' என்ற சொல்லில் வழங்குகின்றனர். தமிழி உருவானதில் இருவேறு கருத்துகள் இங்கு நிலவுகின்றன.

தமிழ்நாட்டில் அகழாய்வில் கிடைக்கும் மண்பாண்டங்கள் போன்ற தொல் பொருள்கள் மீதும் கீறப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தமிழி எழுத்து வடிவம் உருவாகியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும், ஹரப்பா நாகரிகத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற மற்றொரு கருத்தும் கூறப்படுகின்றன.

ஆயினும், கிண்ணிமங்கலத்தில் கிடைக்கப்பெற்ற கல்தூண், குகைக் கல்வெட்டுகள், பாறைகள், அரசர்கள் வெளியிட்ட நாணயங்கள், நடுகல் உள்ளிட்டவை, 'தமிழி' எழுத்து வடிவம் தமிழர்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதற்கான சான்றாக நிற்கின்றன.

பாண்டியர்கள் காலத்தில் 'தமிழி' வடிவத்திலிருந்து மிக நேர்த்தியாக வட்ட வடிவத்தில் எழுதக்கூடிய வட்டெழுத்துகளாக அவை உருமாறின. அதே சம காலத்தில் தமிழி எழுத்துவடிவம் இப்போது பேசும், எழுதும் தமிழாகவும் பரிணாமம் அடைந்தது என்று தொல்லியல் அறிஞர்கள் கருத்துரைக்கின்றனர்.

இதையும் படிங்க: மதுரை அருகே தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல் தூண் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.