ஜனவரி 17ஆம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அலங்காநல்லூரைச் சேர்ந்த சிறுவன் சுபிஷன் (6), திடீரென்று மேடையின் பின்புறம் உள்ள படிக்கெட்டில் விறுவிறுவென்று ஏறினான். அப்போது, பாதுகாப்பிற்கு அங்கிருந்த காவலர்கள் அவன் வேகத்தைப் பார்த்து ரசித்தனர்.
'எங்கடா இம்புட்டு வேமா போற' என்று எல்லோரும் கேட்டதற்கு 'ஜல்லிக்கட்டு பார்க்கப் போறேன்' என்று கூறிவிட்டு ஏறத் தொடங்கியுள்ளார். அப்போது, மேடையிலிருந்த ஊரக காவல்துறையைச் சேர்ந்த முத்துச் செல்வம் என்பவர் மேடையிலிருந்தவாறு, அச்சிறுவனை தூக்கி தன்தோள்பட்டையில் வைத்து ஏற்குறைய பத்து நிமிடத்திற்கு மேல் ஜல்லிக்கட்டை காணுமாறுச் செய்தார்.
அச்சமயம் மேடையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் இருந்தனர். சிறுவனின் ஆர்வத்திற்கு அணை போடாமல் தனது தோள்பட்டையில் தூக்கி ஜல்லிக்கட்டை காணும்படிச் செய்த காவலர் முத்துச் செல்வத்தின் செயல் பார்வையாளர்கள் பாரட்டைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வீரர்களை அலறவிட்ட குலமங்கலம் காளை: காரை பரிசாக வழங்கிய ஓபிஎஸ்!