ராமநாதபுரம் மோர்ப்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் என்ற திருமுருகன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில், நடந்துவரும் அகழ்வாராய்ச்சியில் நமது தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருள்கள் கிடைத்துள்ளன. இதுவரை அழகன்குளத்தில் 7 முறை அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்துள்ளன.
ஆனால், இங்கு நடந்த ஆய்வு குறித்து தொல்லியல் துறை இதுவரை முழுமையான அறிக்கையை வெளியிடவில்லை. கடந்த 1992ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஒரு முறை ஒரு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அதில் போதிய தகவல்கள் இல்லை. எனவே, இதுகுறித்த முழுமையான ஆய்வறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
மேலும், இங்கு கண்டெடுக்கப்படும் அரிய வகை பொருள்களான, மண்பாண்டப் பொருள்கள், முதுமக்கள் தாழி போன்றவற்றின் வயதைக் கண்டறிய உரிய பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். இங்கு கிடைக்கும் அரிய பொருள்களைப் பாதுகாத்து வைப்பதற்கு இப்பகுதியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள், துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதி திராவிடர்களைச் சேர்க்கக் கோரிய மனு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க ஆணை