மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று(பிப்.28) மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை சிம்மக்கல் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய செல்லூர் ராஜூ, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்தனர். அந்த வழியில் 7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டை ஈபிஎஸ் கொண்டுவந்தார். அதேபோல் ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கி ஓபிஎஸ், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை நடத்தி ஜல்லிக்கட்டு நாயகனாகத் திகழ்கிறார்.
தற்போது கொளுத்தி எடுக்கும் வெயிலைப் போல, திமுக ஆட்சி மக்களை வாட்டி வதைக்கிறது. அதிமுக நெருக்கடியை சந்திப்பது புதிதல்ல எதையும் சந்திப்போம். அடக்குமுறைகளை செய்து வெற்றி பெறலாம் என நினைக்க வேண்டாம். திமுகவை 10 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியதை மறக்க வேண்டாம்.
பனங்காட்டு நரி எதற்கும் அஞ்சாது
2016இல் யாருடைய உதவியும் இல்லாமல் வெற்றி பெற்றது அதிமுக. அதையும் மறக்க வேண்டாம். ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என கணக்குப் போட்டீர்கள், ஜோதிடம் சொன்னீர்கள். ஆனால் ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். கரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றிய ஆட்சி தான் அதிமுக ஆட்சி. அந்த சமயத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்தோம்.
எதிர்க்கட்சியாக இருந்து பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபின் எதையும் செய்யவில்லை. நாங்கள் பனங்காட்டு நரி, எதற்கும் அஞ்சமாட்டோம். அதிமுக, திமுகவில் இணையும் என ஆருடம் சொல்கிறார், அமைச்சர் ஒருவர். அது ஒரு போதும் நடக்காது. இது ஜனநாயக இயக்கம். அழகிரி அதிமுக அழிந்துவிடும் என்றார். ஆனால், அதற்குப்பின் இரண்டு முறை ஆட்சிக்கு வந்தோம்.
தேர்தல் முடிந்ததும் சோர்ந்துவிட்டோம் என திமுக நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுக ஒரு போதும் சோர்ந்து போகாது. வீறுகொண்டு எழும். திமுக மக்களிடம் சொன்ன வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்