அதிமுக எதற்கும் தயார்- ராஜன் செல்லப்பா - திமுக தலைவர் ஸ்டாலின்
மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக எதற்கும் தயாராக உள்ளது என்று அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளுக்கான பூத் கமிட்டி கூட்டம் இன்று திருப்பரங்குன்றம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் அதிமுக வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா,”கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து இருந்தாலும்கூட தற்போது அதிமுக ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்”. எனத் தெரிவித்தார்.
நீட் தேர்வு உள் ஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியிட பல தலைவர்கள் வலியுறுத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நீட் தேர்வில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வாய்ப்பில்லை. நீட் தேர்வில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு திட்டங்களை அதிமுக கொண்டுவந்தது. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் அதுவரை எந்த ஒரு கலந்தாய்வும் நடைபெறாது என முதலமைச்சர் கூறியிருக்கிறார்” எனக் கூறினார்.
தோல்வி அடைவோம் என்ற காரணத்திற்காகவே ஓபிஎஸ், இபிஎஸ் -ஐ முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளார் என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுக கட்சியை பற்றி ஸ்டாலின் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் சொல்வதை வேடிக்கையாகவே மக்கள் பார்க்கின்றனர். ஓபிஎஸ் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த ஒரு நல்ல முடிவை எடுத்து இருக்கின்றார் எனத் தெரிவித்தார்.
பாஜகவில் சில தலைவர்கள் 234 தொகுதிகள் தனித்துப் போட்டியிடுவோம் என கூறுவது குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு,
அதிமுக மக்களை நம்பி இருக்கின்ற கட்சி, அதிமுக அனைத்து கட்சிகளையும் அரவணைத்தும் தேர்தலில் போட்டியிட்டு இருக்கின்றது, தனித்துவமாக 234 தொகுதியிலும் போட்டியிட்டு இருக்கின்றது. எதற்கும் அதிமுக தயாராக இருக்கிறது என பதிலளித்தார்.