மதுரை: காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக அமைப்பு தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அதிமுக, கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்னும், ராமதாஸின் குற்றச்சாட்டு, போராட்டங்கள் நடத்தும் பாஜக ஆகியவை குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதுகுறித்து அவர் பேசுகையில், “பாமக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. அவர்கள் விலகிய பின் பேசும் கருத்துக்களுக்கு, நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். பாமகவினர் பேசுவதற்கு அதிமுக தலைவர்கள் பதில் சொல்வார்கள். பாஜக வளரும் கட்சி என்பதால் அடிக்கடி போராட்டங்கள் நடத்துகிறார்கள்.
யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது பெரிதல்ல. என்ன காரணத்திற்காக போராடுகிறார்கள் என்பதே முக்கியம். எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கிற போராட்டமாக இருக்க வேண்டும். அடிக்கடி போராட்டம் நடத்தி மக்களை தொந்தரவு செய்ய அதிமுக விரும்பவில்லை' என்றார்.
இதையும் படிங்க: பாஜகவினருக்கு டஃப் கொடுக்கும் திமுக - செந்தில் பாலாஜி மேற்கொள்ளும் தீவிரமான ஆன்மிக அரசியல்!