மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தக திருவிழா மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. செப் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்பு வாய்ந்த புதுமையான புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும் வகையில் 200க்கும் மேற்பட்ட புத்தக கடைகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. புத்தக கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தகத் திருவிழாவின் மூலம் கிடைக்கும் வருவாய் மூலமாக கிராமப்புற பின்தங்கிய நகர்ப்புறங்களில் பள்ளி நூலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
'நம்ம ஊர் சூப்பர் ' என்ற தலைப்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக பகுதிகளில் கடந்த ஆக 20 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு, பொது இடங்களை சுகாதாரமாக பேணிக்காப்பது, உள்ளிட்ட தூய்மைப்பணிகள் நடைபெற்றது" என்று ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கு ... விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் அறிக்கை தாக்கல்