மதுரை: பரமக்குடியைச் சேர்ந்த பாலமுரளி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு (MBC) மொத்தமாக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
68 சமூகத்தைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு 7 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 2.5 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், 40 சமூகத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும். அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி துரைசுவாமி மற்றும் முரளி சங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: தன்பாலின நாட்டத்தைத் தடுக்க நடந்த திருமணம் - குழந்தை பெற்றபின் தலைமறைவான பெண்! - கைவிரித்த நீதிமன்றம்!