கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நூறு நாள்களுக்கும் மேலாக ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூன்று முக்கிய திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக பங்குனிப் பெருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வைகாசி விசாகம் உள் திருவிழாவாக நடைபெற்றது. தற்போது ஆடிப்பூர திருவிழா ரத்து செய்யப்பட்டு உள் திருவிழாவாக நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோவர்த்தனாம்பிகை அம்மன் நான்கு மாசி வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தற்போது இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டு கோயிலிலுள்ள திருவாச்சி மண்டபத்தில் அம்மன் வீதி உலா வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்விற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் இணையதளம் மூலமாக திருவிழாவை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் இல்லாமல் வைகாசி விசாக விழா