மதுரை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்து 'விடுதலை' படம் மூலம் கதையின் நாயகனாகவும் புது உயரத்தைப் பெற்ற நடிகர் சூரி இன்று (ஆகஸ்ட் 27) தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மதுரை மாவட்டம் ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் வேங்கையரசி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த சூரி, சின்னஞ்சிறு கதாபாத்திரங்களில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படம் மூலம் பரோட்டா சாப்பிடும் காட்சியில் அனைவரையும் கவர்ந்து பரோட்டா சூரியாக அவரை திரையுலகம் பெயர் மாற்றம் செய்தது. சூரி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவ்வப்போது மதுரையில் ஆதரவற்றோர்களை அழைத்துச் சென்று பராமரித்தல், மாநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குப்பைகளைத் தூய்மைப்படுத்துதல் போன்ற சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க” - சந்திரமுகி 2 விழாவில் வடிவேலு பேச்சு!
இதனைத் தொடர்ந்து சூரியின் 46ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 27) மகப்பேறு பிரிவில் பிறந்த அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் இரண்டரை கிராம் மதிப்பிலான தங்க மோதிரத்தையும், லட்டு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்.
நேற்று (ஆகஸ்ட் 26) நள்ளிரவிலிருந்து இன்று (ஆகஸ்ட் 27) நள்ளிரவு வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்பட்ட உள்ளது, காலையிலிருந்து மாலை வரை 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் சூரி நற்பணி மன்ற அகில இந்தியத் தலைவர் ஆதிசுவரன், நடிகர் சூரியின் உடன் பிறந்த இரட்டை சகோதரர் லக்ஷ்மணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் சூரி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 27) பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டரை கிராம் தங்க மோதிரங்கள் அணிவித்துப் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர் மன்றத்தினரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அட நயன்தாரா குழந்தைங்களா இவங்க..! ஓணம் பண்டிகையில் கவனத்தை ஈர்த்த உயிர், உலகம்..!