மதுரை : நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது 'ஜெயிலர்' திரைப்படம். இப்படம் உலகெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றியைப் படைத்துள்ளது. மேலும் இதுவரை உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
கலாநிதிமாறன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தென்சினிமாவில் முன்னனி நடிகர்களான மலையாள நடிகர்கள் மோகன்லால், விநாயகம், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நடிகர் யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர்.
இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில், ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் 25வது நாள் விழாவை முன்னிட்டு மதுரை, அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் ரசிகர்கள் ரஜினி பட பேனர்களுக்கு மாலை அணிவித்தும், சூடமேற்றி, பூசணிக்காய் உடைத்தும் வழிப்பட்டனர். அதைத் தொடர்ந்து அம்பிகா திரையரங்கம் முன்பு, ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரவணன், "நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் போல. இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என அவருக்கு எல்லாமே நன்றாகத் தெரியும். ரஜினியின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிய ஒரே மாதத்தில் ஹீரோ ஆனவன் நான். ஜெயிலர் படம் ஹிட் ஆகும் எனத் தெரிந்து தான் ரஜினி இமயமலைக்கு சென்றார். ரஜினியின் வாக்கு சித்தர் வாக்கு மாதிரி என்றார்.
மேலும் ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்க உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு, ஆளுநர் பதவியெல்லாம் ஒன்றும் அவருக்கு வேண்டாம். அவர் நன்றாக உடல்நலத்தோடு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தாலே போதும். எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டாம்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சரவணன், பாவம் வேண்டாம், அவரை விட்டுவிடுங்கள். அரசியலுக்கு அவர் வர வேண்டாம் நிம்மதியாக இருக்கட்டும். ஊடகங்கள் நீங்கள் அவரை அரசியலுக்கு இழுக்காதீர்கள். ஓபிஎஸ் ரஜினி சந்தித்து என்ன பேசினார்கள் என யாருக்குமே தெரியாது. சாப்பிட்டீர்களா... குடும்பத்தில் எல்லோரும் எப்படி இருக்காங்க என்று கூட பேசி இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு..பின்னணி என்ன..?