மதுரை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செல்லூர் 50 அடி சாலையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். இதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதைவிட உலகில் கேவலம் எதுவும் இல்லை
இந்த விழாவில் பேசிய ராதாரவி, "திமுகவில் அடிமட்ட தொண்டர்கள், கழக மேல்மட்டத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள், இடையில் இருக்கும் சிலர்தான் சரி இல்லாதவர்கள். சினிமா துறையில் பல்வேறு யூனியன்கள் உள்ளன.
அவற்றில் நான் ஒரு யூனியனுக்கு தலைவராக உள்ளேன். என்னைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனச் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன் பழிவாங்கும் படலம் நடக்கிறது.
நான் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கைவைக்கிறேன். செந்தில் பாலாஜியைக் கைதுசெய்வோம் என்று சொன்னீர்கள், தற்போது அவரை அருகில் வைத்துள்ளீர்கள் இதைவிட உலகில் கேவலம் எதுவும் இல்லை.
மத்திய அரசிடம் கையேந்திதான் ஆக வேண்டும்
தமிழ்நாட்டில் தற்போது நான்கு பாஜகவில் எம்எல்ஏக்கள் உள்ளனர். அடுத்தபடியாக 2026இல் தமிழ்நாட்டில் 80 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள். நாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டியது இல்லை எங்களைக் கேட்டுத்தான் ஆட்சி நடக்கும். நம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மாரிதாஸ் போன்றவர்கள் பேசிவருகிறார்கள்.
அவர்களைச் சிறையில் அடைக்கின்றனர். அவர்கள் சிறை சென்று பின்னர் வெளியே வருகின்றனர். மாநிலம் சார்ந்த நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் மத்திய அரசிடம் கையேந்திதான் ஆக வேண்டும்.
கோபேக் மோடி என பலூன் விட முடியுமா
என்னைச் சிலர் திமுகவிலிருந்து அதிமுக சென்று பாஜக சென்றுவிட்டீர்களே எனக் கேட்கிறார்கள், நான் கேட்கிறேன் வைகோவைக் கேளுங்கள், அதேபோல கூட்டணியை மாற்றி மாற்றி அமைக்கும் திருமாவளவனைக் கேளுங்கள் என்பேன்.
கடந்த முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த பொழுது கோ பேக் மோடி என திமுகவினர், திருமா, வைகோ போன்றவர்கள் கூறினர். வருகிற 12ஆம் தேதி மதுரை வரும் பிரதமருக்கு வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் கோபேக் மோடி என பலூன் விட முடியுமா எனச் சவால் விடுகிறேன்.
கருணாநிதி தற்போது உயிருடன் இருந்திருந்தால்
ஸ்டாலின் மத்திய அரசை எதிர்க்கக் கூடாது எதிர்த்தால் எதுவும் நடக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் நல்லவர், ஆனால் கருணாநிதியைப் போல் அறிவாளி அல்ல. கருணாநிதி தற்போது உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசில் இடம்பெற்றிருப்பார்.
திராவிட கட்சிகளின் வழியில் சென்றுதான் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக நல்லாட்சி புரிய வேண்டுமானால் மத்திய அரசோடு இணைந்து செல்ல வேண்டும்" எனப் பேசினார்.