மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வைகை ஆற்றுப்படுகையில் சட்டவிரோத மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு பொதுமக்களும் குடிநீருக்காக அல்லாடும் நிலை உருவானது.
இதன் காரணமாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தபோது, 24 மணி நேரமும் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர் என உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் வைகை ஆற்றுப் படுகைகளில் அதிகளவில் மீண்டும் மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது. இவற்றிலிருந்து தப்புவதற்காக குற்றவாளிகள் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு கையூட்டு வழங்கியுள்ளனர். அவர்களும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை. இது தொடர்பாக நடவடிக்கைக் கோரி மீண்டும் மனு அளித்த நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மிரட்டிவருகின்றனர்.
வைகை ஆற்றுப் படுகையில் நடைபெறும் மணல் கொள்ளையால், விவசாயிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். ஆகவே, திண்டுக்கல் மாவட்ட வைகை ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ள தடைவிதிப்பதோடு, மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீதும் அதற்கு துணைபோன அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, வைகை ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோத மணல் கொள்ளை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.