மதுரை: ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செல்போன் மூலம், முன்பதிவில்லாத பயணச்சீட்டுக்களை பெற QR code திட்டத்தை, அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இதன் எதிரொலியாக செல்போன் செயலி மூலம் பயணச்சீட்டுக்களை பதிவு செய்வது மதுரை ரயில்வே கோட்டத்தில் அதிகரித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை, 10 மாத காலங்களில் செல்போன் செயலி மூலம் 91,811 பயணச்சீட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், "அதிகபட்சமாக ஒரு பயணச்சீட்டில் 4 பேரை பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில், 6,90,211 பயணிகள் செல்போன் செயலி மூலம் பயணச்சீட்டு பெற்று ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இதன் மூலம் ரூ.1.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக மதுரை ரயில் நிலையத்தில் 86,696 பயணிகள் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து, பயணச்சீட்டு பெற்றதுடன் ரூ.28.29 லட்சம் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
திருநெல்வேலியில் 68,165 பயணிகள், 10,555 பயணச்சீட்டுக்களை பதிவு செய்து ரூ.11,96,980 கட்டணம் செலுத்தியுள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் 4,121 பயணிகள் 1,661 பயணச்சீட்டுகளுக்காக, ரூ.3,11,490-ஐ கட்டணமாக செலுத்தியுள்ளனர்." என கூறினர்.