மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 2020 முதல் அக்டோபர் மாதம் 2020 வரையிலான ஏழு மாதங்களில் 9 ஆயிரத்து 879 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற இந்தப் பிரசவங்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 8 ஆயிரத்து 408 பிரசவங்கள் நடைபெற்றன.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 266 கர்ப்பிணிகளுக்கு இதே காலகட்டத்தில் பிரசவம் பார்க்கப்பட்டதுடன், ஜூலை 2 மற்றும் அக்டோபர் 22 தேதிகளில் ஒரே நாளில் 66 சிக்கலான பிரசவங்கள் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நிகழாமல் பார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, மகப்பேறியல் துறையின் தலைவர் டாக்டர் சுமதி கூறுகையில், “தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் உள்ள பல்வேறு மருத்துவக்கல்லூரிகள், அரசு, தனியார் மருத்துவமனைகளிலிருந்து கர்ப்பிணிகள் சிக்கலான மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் உயர் சிகிச்சை மையமாக அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு துறை திகழ்கிறது” என்றார்.
கரோனா காலகட்டத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பிரசவங்கள் சார்ந்த மருத்துவப்பணிகளுக்காக, மகப்பேறு துறை சார்ந்த பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவிகள் அனைவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி, பாராட்டினார்.