தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஐந்தாவது, எட்டாவது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் என்கிற தமிழ்நாடு அரசின் முடிவு, மாணவர்கள் மீதான உளவியல் தாக்குதல். அவர்களின் உரிமைக்கு எதிரானதும்கூட. அவர்களின் கல்வி உரிமையை பறிப்பதாக அமையும். பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும். கல்வி பரவலாக்கலை தடுக்கும். அதனால் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவினை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையில், சரஸ்வதி நதி என்று ஒரு புதிய வார்த்தை உருவாக்கியுள்ளார். இந்தியாவிற்கு உள்ளே இல்லாத ஒரு நதியை கண்டுபிடிப்பதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் வரிப்பணம்.
இதுபோன்ற தொன்மையான நாகரிக மோசடியில் ஈடுபடக்கூடாது. வரலாற்றை கபளீகரம் செய்யக் கூடாது. தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், தமிழ் கலாசார மரபுப்படி கட்டப்பட்டது. அங்கு தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும். தற்போது தமிழிலும் நடைபெறும் என்ற உத்தரவு எங்களுக்கு முதல் வெற்றி. தொடர்ந்து தமிழில் நடத்த வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'குரு பீடத்தின் மீது விசுவாசம்... நீலிக்கண்ணீர் வடிக்கும் மத்திய பட்ஜெட்' - முத்தரசன்