மதுரையில் மேற்கு கோபுரம் அருகில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "சிறந்த நாடாளுமன்றவாதியும், பேராசிரியருமான அன்பழகன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
மேலும், ஒன்பது மாநில முதலமைச்சர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இச்சட்ட எதிர்ப்புப் போராட்டத்திற்கு, பாகிஸ்தானிலிருந்து பண உதவி கிடைக்கிறது எனவும், அதனாலேயே போராட்டம் நடைபெறுகிறது என்றும் மத்திய அரசின் உளவுத் துறையின் அறிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஆனால், இந்தப் போராட்டம் தன்னெழுச்சியான போராட்டம். அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்துதான் நடத்திவருகின்றனர். மேலும், சிறப்புத் தகுதி பெற்ற காஷ்மீர் மாநிலம் எப்படி, மத்திய அரசின் ஆளுகைக்குள்பட்டதோ, அதுபோன்ற நிலைமை தமிழ்நாட்டிற்கும் வரலாம். அதுபோல, தமிழ்நாட்டையும் இரண்டு மூன்றாகப் பிரித்து, மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம்.
எனவே, இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, அனைவரும் போராட வேண்டும். அரசியல் சட்டம் வழங்கிய அனைத்து கருத்து உரிமைகளும், தற்போது அழிக்கப்பட்டுவருகின்றன. இதேபோல் ஊடகங்களின் சுதந்திரம் தற்போது பறிக்கப்பட்டுவருகிறது. இது நாட்டில் நிலவும் அவசர நிலையின் அறிகுறிகள். ஒரு சட்டத்தை எதிர்த்து கருத்து கூற அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.
தொடர்ந்து, ஒரு கருத்தை ஏற்கவோ, எதிர்க்கவோ மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இன்று அறிவிக்கப்படாத, ஒரு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு சட்டப்பேரவையில், முதலமைச்சர் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு கொண்டுவரும் தீர்மானத்தை ஆளும் கட்சியினர் ஆதரிக்காவிட்டால், அவர்களுடைய உண்மையான நிலை மக்களுக்குத் தெரிந்துவிடும். எனவே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இச்சட்டத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல் - திமுகவினர் இன்று வேட்புமனு தாக்கல்