மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே சம்பகுடி பகுதியில் உள்ள அழகுமணி என்பவருக்குச் சொந்தமான மூன்று ஆடுகளும், முத்துமாரி என்பவருக்குச் சொந்தமான ஐந்து ஆடுகளும் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் ரோந்துப் பணியில் இருக்கும்போது சந்தேகத்திற்கிடமான ஆட்டோ ஒன்று சென்றதைப் பார்த்துள்ளனர். உடனடியாக ஆட்டோவை மறித்த காவல் துறையினர், ஆட்டோவை சோதனையிட்டுள்ளனர். ஆட்டோவுக்குள் வாயில் டேப் சுற்றப்பட்டு பல ஆடுகள் இருந்துள்ளன. பின்னர், ஆட்டோ ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் ராக்கெட் ஜெயகோபால் என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட ஆடுகள், 50க்கும் மேற்பட்ட மாடுகள் என மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, பேரையூர், கல்லுப்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகியப் பகுதிகளில் திருடியதும் தெரியவந்தது.
ஆடுகளைத் திருடி வில்லாபுரத்தைச் சேர்ந்த நபரிடம் விற்பனை செய்ததும், மாடுகளை வாடிப்பட்டி சந்தையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் கடத்தப்பட்ட 8 ஆடுகள், ராக்கெட் ஜெயபாலிடமிருந்து ஆடுகளை வாங்கிய நபரிடமிருந்து 42 ஆடுகள் உள்பட 50 ஆடுகளை காவல் துறையினர் கைப்பற்றி, உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'கண்ணம்மா' திரைப்படத்தில் ஆடு திருடனாக 'சுனா பானா' என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு கதாபாத்திரத்தை, ராக்கெட் ஜெயகோபால் கண்முன் நிறுத்துகிறார்.
இதையும் படிங்க: ஆடுகளைக் கொன்ற சிறுத்தை - இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல்