மதுரை: திருமங்கலத்தை சேர்ந்த ராஜசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற விபத்தில் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் 100 விழுக்காடு காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
அங்கு பணியாற்றியவர்களில் சிலர் இந்த வெடிமருந்துகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான அடிப்படை பயிற்சி அற்றவர்கள், இதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்தது என தெரியவருகிறது.
உரிமத்தை ஒருவரது பெயரில் பெற்றுக்கொண்டு அதன் கீழ் பல கிளைகளாக பட்டாசு ஆலைகள் இயங்குவது அதிகரித்து வருகிறது. முறையான, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் பணியாற்றியது, இந்த விபத்தில் அதிகம்பேர் உயிரிழந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது.
அரசு அலுவலர்கள் விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வதில்லை. அரசு அலுவலர்களின் இந்த பொறுப்பற்ற, மெத்தன போக்கு காரணமாகவே இது போன்ற விபத்துக்கள் நிகழ்ந்து ஏராளமானோர் உயிரிழக்கின்றனர்.
ஆகவே, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு ஆலையில் நடைபெற்ற விபத்து தொடர்பாக விசாரிக்க தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். இது போன்ற விபத்துகள் வரும் காலங்களில் தவிர்க்கப்படும் வகையில் விதிமீறுவோரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைத்து உள்ளது. இந்த குழு பட்டாசு ஆலையில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தரும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் எத்தனை?