மதுரை திருப்பரங்குன்றம் மொட்டைமலை விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் பார்வதி தேவி(32). இவருக்கு மணிமேகலை(12), மணி பாரதி(8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில், திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தத்தில் பெயிண்ட் கடை ஒன்றை பார்வதி நடத்திவருகிறார். தினம்தோறும் காலை 9 மணிக்கு கடைக்குச் சென்று மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று (மார்ச் 13) கடைக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்த பார்வதி, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 93 சவரன் தங்க நகைகள், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து, உடனடியாக ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 12 லட்சத்துடன் திறந்து கிடந்த ஏடிஎம் இயந்திரம்