மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், ரயில்வே ராணுவப்படையில் கர்னலாக இருப்பதால் ராணுவ உடையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "மதுரை ரயில்வே கோட்டம், கடந்த 9 மாதங்களில் 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டு வருமானத்தைவிட 57 சதவீதம் அதிகம். ரயில்வே வாரியம் நிர்ணயித்த வருமான இலக்கான 666.83 கோடியைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம். ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மதுரை கோட்டத்தில் ரயில்களில் 25 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டில் இதே காலத்தில் 9.2 மில்லியன் பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.
ரயில் பயணச்சீட்டு வருமானம் 502.05 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு வருவாயை விட 79 சதவீதம் அதிகம். சரக்கு போக்குவரத்தில் 2.20 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கான 1.67 மில்லியன் டன்னை காட்டிலும் 32 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அதிகபட்ச அளவாக 2.2 லட்சம் டன் சரக்குகள் சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதன்மூலம் எப்போதும் இல்லாத அதிகபட்ச வருமானமாக 19.99 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. கோட்ட வர்த்தக வளர்ச்சி அமைப்பின் சீரிய முயற்சியினால் 117 சரக்கு ரயில்களில் டிராக்டர்கள், 82 ரயில்களில் சுண்ணாம்புக்கல், 45 ரயில்களில் மரக்கரி, 433 ரயில்களில் ரசாயன உரங்கள், 12 ரயில்களில் சரளைக்கற்கள், 4 ரயில்களில் ஜிப்சம் ஆகியவை பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கோவில்பட்டி - கடம்பூர் ரயில்வே பிரிவில் ஜனவரி 11ஆம் தேதி இரட்டை ரயில் பாதை சேவை தொடங்கி வைக்கப்பட்டது. ரயில் பாதைகள் பலப்படுத்தப்பட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் மணிக்கு 70 கி.மீ. ஆக இருந்த ரயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆகவும், திருமங்கலம் - கடம்பூர், கங்கைகொண்டான் - திருநெல்வேலி, திருச்சி - புதுக்கோட்டை ஆகிய ரயில் பிரிவுகளில் மணிக்கு 90 கி.மீ. ஆக இருந்த ரயில்களின் வேகம் மணிக்கு 100 கி.மீ. ஆகவும், தட்டப்பாறை - மீளவிட்டான் ரயில் பிரிவில் மணிக்கு 75 கி.மீ. ஆக இருந்த ரயில்களின் வேகம் மணிக்கு 90 கி.மீ. ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்டத்தில் 76 சதவீத ரயில் பாதைகள் மின்மயாக்கப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் 90.5 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும். ரயில்வே ஊழியர் நலக் குறைபாடுகளை தீர்த்து வைக்க 'தீர்வு' என்ற பெயரில் வாட்ஸ்அப் செயலி மூலம் குறை தீர்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர் நலம் சார்ந்த தகவல்களை எளிதாகப் பெற 'களஞ்சியம்' என்ற இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது" என்றார்.
விழாவின் இறுதியில் ரயில்வே பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ரமேஷ் பாபு, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் வி.ஜே.பி. அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே