2007ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி தினகரன் பத்திரிகை, கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது. திமுக கட்சியின் முக்கிய தலைவராக இருந்த மு.கருணாநிதி மகன் மு.க.அழகிரி குறித்து வெளியான கருத்துக் கணிப்பின் காரணமாக மதுரையிலுள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் அழகிரி ஆதரவாளர்களால் சூறையாடப்பட்டது.
அதேபோன்று அலுவலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீ வைக்கப்பட்டது. அப்போது தினகரன் அலுவலகத்தில் கணினிப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் புகைமூட்டத்தில் மூச்சு திணறி பலியாகினர்.
தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, திமுக தொண்டர் அணியின் அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு பின்னர் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து சிபிஐ இவ்வழக்கில் தொடர்புடைய 32 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் 2009ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதி மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.
பின்னர், சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தொடர்பாக நடந்த விசாரணைக்குப்பிறகு இன்று காலை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன் அட்டாக் பாண்டி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் அந்த சம்பவத்தில் பலியான மூன்று பேர் குடும்பங்களுக்கும் ரூபாய் ஐந்து லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.