குப்பையில் கிடந்த பொருட்களை சாப்பிட்ட 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - குப்பையில் கிடந்த
குப்பையில் கிடந்த காலாவதியான பொருள்களை சாப்பிட்ட 8ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை : மதுரை அருகே குப்பையில் கிடந்த காலாவதியான பொருட்களை சாப்பிட்ட எட்டாம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் 1ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னாண்டி. இவரது மகன் குணா (13). இவர், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
வாந்தி- மயக்கம்
சிறுவன் குணா தனது நண்பன் சசிகுமாருடன் (11) அந்தப் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் அவர்களின் பள்ளி அருகே குப்பையில் கிடந்த காலாவதியான ஹார்லிக்ஸ் பூஸ்ட் ஆகிய உணவுப் பொருள்களை சாப்பிட்டுள்ளனர்.
அதனை உண்ட சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அலங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.
உயிரிழப்பு
பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையின் சிறுவன் குணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவர் சசிகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
குப்பையில் கிடந்த காலாவதியான பொருள்களை தின்ற பள்ளி மாணவர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்திருப்பது அலங்காநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : கல்லூரி மாணவன் விஷமருந்தி தற்கொலை: கழுத்தளவு ஆற்றுநீரில் உடலை தூக்கிச்சென்ற அவலம்