மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ராகுல். இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றுவருகிறார்.
கரோனா ஊரடங்கால் தந்தைக்கு வேலை இல்லாமல் இருந்த நிலையில், மற்ற நடுத்தரக் குடும்பங்கள் சந்தித்துவரும், பொருளாதாரச் சிரமத்தை சிறுவனின் குடும்பத்தினரும் சந்திக்க நேரிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும் தந்தைக்குச் சரிவர வேலைவாய்ப்பு இல்லாததால் அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கே திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரி பாடமுறைகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டதால் அதற்கான அலைபேசி வாங்க தந்தையிடம் பணம் இல்லாததை உணர்ந்து, தனது முயற்சியில் பணம் ஈட்டி தனக்கும் தனது அக்காவிற்கும் மொபைல் வாங்க ராகுல் முடிவெடுத்துள்ளார்.
இதன் முயற்சியாக சிறுவனின் தாய், அக்காவின் உதவியோடு வீட்டில் தேநீர் தயார்செய்து, அருகில் உள்ள கடைகள், வணிக வளாகங்களுக்கு மிதிவண்டி மூலம் தேநீர் விற்பனை செய்துவருகிறார்.
இதன்மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தினை சிறிது சிறிதாகச் சேர்த்துவைத்து தனக்கும், தனது அக்காவிற்கும் ஆன்லைன் படிப்பிற்காக புதிய மொபைல் போன் வாங்க முயற்சி செய்துவருவதாக ராகுல் கூறுகிறார்.
இதுமட்டுமன்றி சிறுவன் தேநீர் விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தால் தற்போது தங்களுடைய குடும்பச் செலவினை ஓரளவிற்கு ஈடுகட்ட முடிவதாகவும் சிறுவனின் தாயார் சுமதி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சி எனக்கு... ஆட்சி உனக்கு .... ராமன் லட்சுமணன் ஓபிஎஸ் -ஈபிஎஸ்