மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மாலைப்பட்டி கிராமத்தில் உள்ள மசூதியில் வெளிநாட்டினர் தங்கியுள்ளதாகவும் அவர்கள் கரோனா வைரசை பரப்ப வந்துள்ளார்கள் என பொதுமக்களிடையே காட்டுத் தீ போல் வதந்தி பரவியது.
உடனடியாக கிராம மக்கள் திரண்டு மசூதியை அடைக்க வேண்டும், வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப வேண்டும் என மசூதி முன் குவிந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சத்திரப்பட்டி காவல் துறையினர், சுகாதாரத்துறை அலுவலர்களை வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், எட்டு பேரும் தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து ரயில் மூலம் மதுரை அண்ணா நகர் பகுதியிலுள்ள பர்காஸ் என்ற மசூதியில் தங்கி இஸ்லாமிய மதத்தை படிக்கவும், பரப்பவும் வந்துள்ளது தெரியவந்தது.
பிறகு அங்கிருந்து அவர்கள் அலங்காநல்லூர் அருகே உள்ள மாலைப்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் கடந்த நான்கு நாட்களாக தங்கியுள்ளது தெரியவந்தது. இவர்கள் எட்டு பேரும் வரும் 31ஆம் தேதி மீண்டும் தாய்லாந்து திரும்ப விமான பயண சீட்டு எடுத்துள்ளது தெரிய வந்தது.
பழனியை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் எட்டு வெளிநாட்டினரை மதுரைக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த எட்டு பேரில் இரண்டு பேருக்கு இருமல், காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், மற்றொருவர் உடல் நலம் குறைவாக உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது கரோனா அறிகுறி என தெரிய வந்ததையடுத்து எட்டு நபர்களை மருந்துவ அலுவலர்கள் பத்திரமாக அரசு வேனில் ஏற்றி மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சோதனை செய்தனர்.
பிறகு அனைத்து நோய்வாய்ப்பட்ட மக்களும் கூடும் இடமாக இருப்பதால் தனிமைப்படுத்துவதற்காக தோப்பூர் அரசு காச நோய் மருத்துவமனையில் உள்ள கரோனா மருத்துவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரசு தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக மூன்று வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 60 நபர்கள் கண்காணிப்பில் வைக்கவும் 30க்கும் மேற்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தாக்கம்: ரூ.20 லட்சம் கோடி நஷ்டத்தில் விமான போக்குவரத்துத் துறை