சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக தற்போது ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கீழடி மட்டுமன்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு புதிய பொருள்கள், மனித எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள் கிடைத்துவருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் காணொலி காட்சி மூலம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. தற்போது கொந்தகையில் நடைபெற்றுவரும் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளில் முதுமக்கள் தாழிகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்து வருகின்றன.
இப்பகுதி சங்க காலத்திற்கு முற்பட்ட ஈமக் காடு என்பதால் கீழடி அகழாய்வில் கொந்தகை முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளில் ஐந்துக்கு மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் இரண்டு முதுமக்கள் தாழிகளில் இருந்த மனித எலும்புக்கூடுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் ஆய்வுப் பணிகளில் ஒரே குழியில் சமதள நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ’அரண்மனைகள் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்’- அமைச்சர் எ.வ.வேலு