மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”பொதுத்தேர்வில் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009இன்படி,14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும். இந்தச் சட்டத்தில் 5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அறிமுகம்செய்து திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்படி எந்த மாநிலமும் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அமல்படுத்தவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இந்தாண்டு முதல் 5, 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அடுத்த இரண்டு மாதத்தில் மறுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றிபெற வேண்டும். இந்தச் சிறுவயதில் மாணவ, மாணவிகளை மறுத்தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் பள்ளியில் இடைநிற்றல் அதிகரிக்கும்.
தரமான கல்வி முறை அமலில் இருக்கும் நாடுகளில்கூட 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறை அமலில் இல்லை. இருப்பினும், தமிழ்நாட்டில் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அமல்படுத்துவதில் தொடக்கக் கல்வித் துறை தீவிரமாக உள்ளது.
எனவே, நடப்பாண்டில் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், அரசிதழ் வெளியீடு, அரசாணையைச் செயல்படுத்த இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ பள்ளியில் இதுபோன்ற 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்ச்சிபெறாத மாணவர்களை அரசு என்ன செய்யப்போகிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இவ்வழக்குத் தொடர்பாக மத்திய மேம்பாட்டுத் துறை செயலர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 19ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மைய குழப்பம்: தெளிவுப்படுத்த ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!