மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோது வீட்டை விட்டு வெளியே வருபவர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மதுரை மாநகரை பொறுத்தவரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து மதுரை மாநகரில் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்கள், சாலைகளில் தேவையின்றி திரியும் பொதுமக்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். மதுரையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றிவருகின்ரனர். இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை மீறும் மக்கள் மற்றும் வியாபாரிகளை காவல் துறையினர் கைது செய்துவருகின்ரனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு முடிவுற்ற நிலையில், மக்கள் சிலர் நேற்று மீண்டும் வாகனங்களில் சுற்றி திரிய ஆரம்பித்தனர். இதனால் மாநகர போலீசார் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரை கைது செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, மதுரை மாநகரில் நேற்று (30-ந்தேதி) மட்டும் ஊரடங்கை மீறியதாக 93 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 93 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து நேற்று (30-ந்தேதி) வரை ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக ஏழாயிரத்து 613 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக எட்டாயிரத்து 278 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து நான்காயிரத்து 297 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் நேற்று (30-ந்தேதி) மட்டும் ஊரடங்கை மீறியதாக 319 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 420 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 155 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து நேற்றுவரை சட்டத்தை மீறியதாக ஒன்பதாயிரத்து 730 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக 13 ஆயிரத்து,102 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஐந்தாயிரத்து 63 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதையும் பார்க்க: ஊரடங்கில் தலை தூக்கும் கள்ளச்சாராய விற்பனை: சட்டவிரோதமாக விற்பனை செய்த இருவர் கைது