மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமம் உள்ளது. கடந்த சில நாட்களாக இக்கிராமத்தில், பத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சுகாதாரத்துறையினர் இரண்டு நாட்களுக்கு முன்பு பொன்னமங்கலம் கிராமத்தினருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனை முடிவில் 50 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தும், அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவித்தனர்.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டோரை முகாமிற்கு அழைத்துச் செல்ல அரசு ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனையடுத்து 2 தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் காமராஜர் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இதனை அப்பகுதியில் வசித்த இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். கரோனாவில் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகளை இரண்டு ஆம்புலன்ஸ் மூலம் கரோனா சிகிச்சை மையத்துக்கு சுகாதாரத்துறையினர் அனுப்பிவைத்த சம்பவம் பெரும் சர்சையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.