மதுரை: தென் மாவட்டங்களில் மிகப் பெரிய அரசு மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை திகழ்கிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதேபோன்று வசதியானவர்களும் கூட மகப்பேற்றுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையையே நாடிச் செல்கின்றனர்.
மதுரையை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தை பிறப்பு, இறப்பு, கருக்கலைப்பு உள்ளிட்ட விபரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையுள்ள புள்ளி விபரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 60,717 குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களில் 1,015 குழந்தைகள் இரட்டையர்கள்.
இதே காலகட்டத்தில் 4,312 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் அதிகமாக 1,413 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று கடந்த 4 ஆண்டுகளில் 21,685 பேருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப் பிறந்துள்ளது. மொத்த பிரசவத்தில் 64 விழுக்காடு சுகப்பிரசவம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசவத்தின்போது 197 தாய்மார்கள் கடந்த 4 ஆண்டுகளில் இறந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டில் 69 பேர் பிரசவத்தின்போது அதிகபட்சமாக இறந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்து 30 பேர் மட்டுமே இறந்துள்ளனர். 1258 குழந்தைகள் பிரசவத்தின்போது இறந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு 325 குழந்தைகள் அதிகபட்சமாக இறந்துள்ளது. 11,830 பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளனர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 3,216 பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் அனல் பறக்கும் க்ளிக்ஸ்