மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள S.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டறிந்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது," ஆரம்பக் காலங்களில் நம் மக்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான். கால்நடை வளர்ப்புக்கென்று தனியாக ஒரு குழு அமைத்து பாதுகாத்து வந்தனர். கால்நடைகளுக்கு பொதுவாக ஆபத்தை விளைவிக்கும் பாம்புகளும், கால்நடைகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் புலிகளும் & நரிகளும் மற்றும் மாமிச பட்சினிகளும் அதிகமாக மலை பகுதிகளில் காணப்படும்.
![400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-06-hero-stone-identified-script-7208110_09062022203743_0906f_1654787263_25.jpg)
இவைகளிடமிருந்து கால்நடைகளைக் காக்கும் பொருட்டு வீரர்கள் போராடி உள்ளனர். இவ்விதமான போராட்டத்தின் போது வீரர்களோ அல்லது புலியோ இறப்பது உண்டு. இங்கு காணப்படும் சிற்பம் 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலத்துடன் பலகை கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது. அருகில் காணப்படும் பெண் அவ்வீரனின் மனைவியாக இருக்கலாம்.
வீரனின் காலடியில் வேட்டை நாய் காணப்படுகிறது. பாண்டிய நாட்டில் மட்டுமே புலிகுத்தி கல்லில் வேட்டை நாயின் உருவமும் சேர்த்து வடிப்பது வழக்கமாக உள்ளது. மற்ற பகுதிகளில் காணப்படும் புலிகுத்தி கல்லில் இவ்விதம் வேட்டை நாய் காணப்படுவது மிகவும் அபூர்வமாகும். இந்த கல் மிக சேதமடைந்து காணப்படுகிறது.
இப்புலிகுத்தி பட்டான் கல் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இது போன்ற வரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.
இதையும் படிங்க: கால வரலாற்றை காட்டும் முக்கிய ஆவணங்கள்: பழமையான அரிகண்ட கல் கண்டெடுப்பு!
உத்தரமேரூர் அருகே 1,200 ஆண்டு பழமையான முந்தைய மூத்த தேவி சிலை கண்டெடுப்பு!