மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கலந்து கொண்டு தாய்ப்பால் வார விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், தாய்ப்பால் வார விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூட வாய்ப்புள்ள வணிக வளாகங்கள், கோயில்கள், சந்தைகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இக்கண்காணிப்புக் குழுவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கரோனா மூன்றாவது அலை வந்தாலும்கூட சமாளிக்கக் கூடிய வகையில் தேவையான ஏற்பாடுகள் மதுரையில் செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள் தேவையான அளவில் உள்ளன. மேலும், அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கரோனா 3ஆவது அலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளோம். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: நடமாடும் ஊர்தி மூலம் கரோனா தடுப்பூசி - மதுரை ஆட்சியர் தகவல்