மதுரை: தெப்பக்குளம் பங்கஜம் காலனியைச் சேர்ந்தவர் அசோக் குமார். வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளியான இவர், பனைமரம் குறித்த விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு, கரோனா விழிப்புணர்வு என பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இலவச முகக்கவசங்கள் வழங்கிய சிறுவன் இவரது மகன் சுதர்சன் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று (ஜுலை.04) சுதர்சன் தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் தனது பிறந்தநாள் அதுவுமாக முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் கொண்டாடியுள்ளார்.அதன்படி, அண்ணா பேருந்து நிலையம் அருகில் நின்று தாம்பூலத் தட்டில் முகக்கவசங்களும், கடலை மிட்டாய்களையும் வைத்து மக்களுக்கு இலவசமாக வழங்கினார். தொடர்ந்து, முகக்கவசங்கள் அணிவதன் அவசியம் குறித்து சிறுவன் சுதர்சன் பேசியதை, அங்கிருந்த பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.