மாட்டுபொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று காலை 8.30 மணிக்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்வுடன் தொடங்கி மாலை 5மணிக்கு நிறைவடைந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான மாவட்ட ஆட்சியர் வினய், தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவினர் கொடியசைத்து போட்டியினை தொடங்கிவைத்தனர்.
போட்டி தொடங்கியதிலிருந்தே காளைகள் ஒவ்வொன்றும் திமிலை உயர்த்தியபடி மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்தது. மாடுபிடி வீரர்கள் சிலரும் துள்ளிவரும் காளைகளை துல்லியமாக பிடித்து அடக்கினர். காளைகள் வாடிவாசலில் சீறி பறந்து வந்து மாடு பிடி வீரர்களுக்கு போக்கு காட்டும் போது மைதானத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் சப்தமிட்டும், கைதட்டியும் உற்சாக குரல் எழுப்பி ஊக்குவித்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடிவீரர்கள் , காவல்துறையினர் என 26 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 10 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் 669 காளைகளும், 675 மாடுபிடிவீரர்களும் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்க, வெள்ளி காசுகள், ஆடு, டிவி, கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மாட்டுப்பொங்கல்: கால்நடைகளை வணங்கி கும்பிட்ட விவசாயிகள்
போட்டியில் ஏராளமான பெண்களும் காளைகளை வாடிவாசலில் அவிழ்த்துவிட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கிய பொதும்பை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக காரும், 13 காளைகளை அடக்கிய அய்யப்ப நாயக்கப்பட்டியை சேர்ந்த ராஜா என்ற மாடுபிடி வீரருக்கு 2 வது பரிசும், 10காளைகளை அடக்கிய கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரருக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான பரிசு திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சமூக ஆர்வலர் பொன்குமார் என்பவரின் சார்பில் 12 பசுங்கன்றுடன் கூடிய நாட்டு பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது. செட்டியபட்டியை சேர்ந்த செல்வம் என்பவரின் காளைக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.