மதுரையில் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி 15ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 16ஆம் தேதி திக் விஜயமும், 17ஆம் தேதி திருக்கல்யாணமும், 18ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் நடராஜன் தலைமையில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகராட்சி ஆணையர் விசாகன், மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன், அழகர்கோயில் ஆணையர் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேசுகையில், "சித்திரைத் திருவிழாவும், தேர்தலும் ஒரே நேரத்தில் வருவதால் இரண்டும் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவிற்காகவும், தேர்தலுக்காகவும் அதிக அளவில் காவல் துறையினரை கேட்டுள்ளோம்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையிலிருந்து 216 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே மதுரைக்கு வந்துவிடும்.
மேலும் திருவிழாவிற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து மருத்துவத் துறையினரும் காவல் துறையினரும் வரவழைக்கப்படவுள்ளனர். 2018ஆம் ஆண்டைப்போலவே இந்தாண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காணவரும் பக்தர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
அதேபோல், தேர்தல், திருவிழாவிற்காக அதிக பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் விழாவில் பங்குபெறும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இதனைச் சேவையாகக் கருதி பணியில் ஈடுபட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.