தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், மதுரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை வழிப்பறி சம்பவங்கள் நடந்தன, எவ்வளவு தங்கச்சங்கிலிகள் பறிக்கப்பட்டு உள்ளன, இதில் எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டு உள்ளன உள்ளிட்டவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மதுரை மாநகர காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மேற்கண்ட பதிலை அளித்துள்ளது.
அதன்படி, கடந்த 2017ஆம் ஆண்டில் 173 பேரிடம் தங்க நகைகள் பறிக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் 6,714 கிராம் தங்கச்சங்கிலிகள் பறிபோய் உள்ளன. ஆனாலும் இதில் 2,739 கிராம் சங்கிலிகள் மீட்கப்பட்டு உள்ளன. இதேபோல் 2018ஆம் ஆண்டு 132 சம்பவங்கள் நடந்துள்ளன. இதன்மூலம் 3,606 கிராம் தங்கச்சங்கிலிகள் வழிப்பறி செய்யப்பட்டன. இதில் 1,757 கிராம் தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டு உள்ளன. 2019ஆம் ஆண்டு 66 சம்பவங்கள் நடந்துள்ளன. இதன்மூலம் 2,497 கிராம் தங்கச் சங்கிலிகள் பறிபோய் உள்ளன. இதில் 747 கிராம் தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டு உள்ளன என்கிற விவரம் தெரியவந்துள்ளது.
மதுரையை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கடந்த 2017, 2018 ஆகிய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2019ஆம் ஆண்டு வழிப்பறி கொள்ளை வெகுவாகக் குறைந்துள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இதுபோன்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் பெரும்பாலானவற்றில் புதிய நபர்களே ஈடுபடுகின்றனர். குறிப்பாக கணினித் தொழில்நுட்பம் தெரிந்த நபர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் குறித்த ரகசியத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளோம். ஆகையால் அதனை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்வோம். தற்போது நகரிலுள்ள 100 வார்டுகளிலும் சற்றேறக்குறைய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்களைக் கைப்பற்ற தனிப்படை போலீஸார் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: வில்சன் கொலை வழக்கில் சிக்கியவர்கள், சேலம் மத்திய சிறைக்கு மாற்றம்