மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், ''கரோனா தடுப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தும் விதமாக மதுரை மாவட்டத்திற்கு ஆயிரம் எண்ணிக்கையில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளன. இதனைப் பயன்படுத்துவது குறித்து ஐசிஎம்ஆர் மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளன. கரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்களோடு தொடர்பிலிருந்த நபர்கள், முன்னணியில் இயங்கும் சுகாதாரப் பணியாளர்கள் என யாருக்கு ரேபிட் டெஸ்ட் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
அந்த அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், காவலர்களுக்கு இச்சோதனையைத் தொடங்கியுள்ளோம். இக்கருவி மூலமாக எடுக்கப்படும் பரிசோதனைகளின் முடிவு தெரிய 15 நிமிடங்கள் ஆகும். தற்போதுதான் பரிசோதனையைத் தொடங்கியுள்ளோம். மதுரையில் எங்கெல்லாம் தேவையாக உள்ளதோ அங்கெல்லாம் இந்தக் கருவி கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படும்", என்றார்.
இதையும் படிங்க: மதுரை எம்.பி. நடத்திய போட்டிகள்: வெற்றியாளர்களை அறிவித்த விஜய் சேதுபதி