கிருஷ்ணகிரி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தைச் சீரமைப்போம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி, இன்று கிருஷ்ணகிரி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், ஆயிரக்கணக்கான மக்களின் மத்தியில் பேசினார்.
அப்போது, "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படுகிறது. அது சீர்செய்யப்படும். இப்பகுதியில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. அதை காக்க வேண்டும்.
செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இது சினிமாக்காரனை பார்க்க வரும் கூட்டம், ஓட்டுப்போட மாட்டார்கள் என சிலர் தெரிவிக்கின்றனர். கூடும் கூட்டம் தமிழ்நாட்டை மாற்ற வந்த கூட்டம். மக்கள் நீதி மய்யம் நேர்மையாளர்களின் கூட்டம், தமிழ்நாட்டை சீரமைக்க வந்த கூட்டம்.
இளைஞர்கள் படித்து முடித்தபிறகு வேலை தேடும் தொழிலாளியாக அலையாமல் மற்றவர்களுக்கு வேலை தரும் முதலாளிகளாக மாற்ற முடியும். இளைஞர்களுக்காக திறன் மேம்பாட்டு மையத்தை இப்போது மக்கள் நீதி மய்யம் அமைத்துக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் திறன் மேம்பாட்டு மையம் விரைவில் பரமக்குடியில் திறக்கப்படவுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்த ஊர்களிலும் திறக்கப்படும்.
ஆட்சியை கைப்பற்றியதும் சிறு நகரங்கள், பெரு நகரங்களுக்கு இணையான வளர்ச்சியைப் பெறும். இது வாக்குறுதியல்ல, செயல்திட்டத்தின் பட்டியல். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கணிப்பொறி வழங்கப்படும்.
இதனை சிலர் நீங்களும் இலவசமாகத் தானே தருகிறார்கள் என்று சொல்கிறார்கள், இது அரசு மக்கள் மீது செய்யும் முதலீடு. அவ்வாறு செய்தால் மக்களுக்கும் அரசுக்குமான உரையாடல் எளிமையாக இருக்கும். நீர் மேலாண்மையை மேம்படுத்தி நீர்நிலைகளை மீட்டெடுக்கும் காலம் தொடங்கிவிட்டது. அதற்கான ஏற்பாட்டை மக்கள்தான் செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'மாற்றத்தை மக்கள் நீதி மய்யம் உருவாக்கும்' - கமல்ஹாசன்