கிருஷ்ணகிரி: முன்னாள் முதலமைச்சர் காமராஜர் வாழ்ந்த வாழ்க்கையை இன்றைய இளைய தலைமுறைக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம் நிறுவப்பட்டது. அப்போது, அங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அப்படி அவர் பயன்படுத்தி வந்த பொருட்களில் ஒன்றாக இருப்பது “செவர்லெட் கார்” அமெரிக்க நாட்டின் தயாரிப்பான இந்த செவர்லெட் காரை காமராஜர் பயன்படுத்துவதற்காக அவர் முதலமைச்சராக இருந்தபோது டிவிஎஸ் சுந்தரம் ஐயங்கார் காமராஜருக்கு இலவசமாக வழங்கினார்.
இந்த காரை, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தனது வாழ்நாள் இறுதிவரை பயன்படுத்தி வந்தார். இந்த கார் தற்போது காமராஜர் அரங்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்தது. இதனை அறிந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த தியாகி ராஜேந்திரவர்மாவின் மகன் அஸ்வின்ராஜ் அந்த காரினை கடந்த ஜூன் மாதம் எடுத்துவந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் மாற்றம் செய்தார்.
இந்த புதுப்பிக்கப்பட்ட காரினை காமராஜரின் சொந்த ஊரான விருதுநகருக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் கொடியசைத்துத் அனுப்பி வைத்தார். லாரியில் செல்லும் இந்த கார் காமராஜர் கட்டிய கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை சென்று அங்கிருந்து தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக விருதுநகருக்குச் செல்கிறது. மேலும், காமராஜர் பயன்படுத்திய கார் சாலையோரம் வருவதை அறிந்த ஏராளமான மக்கள் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து காரினை புதுப்பிக்கச் செய்த அஸ்வின்ராஜ் மற்றும் அவரது தந்தை ராஜேந்திர வர்மா ஆகியோர் கூறுகையில்; ‘தமிழ்நாட்டில் ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி வழங்கி, விவசாயிகளுக்கு நீர் நிலைகளை உருவாக்கி இன்று வரை அனைவரின் வாழ்வில் அணையா விளக்காகத் திகழும் கர்மவீரர் காமராஜர் அவரது காரை புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு நான் உண்மையில் பெருமைப்படுகிறேன்’. எனக்கு இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குடும்பம் காங்கிரஸ் கட்சி சார்ந்த குடும்பம் காமராஜர் செயல்பாடுகளை எனது பெற்றோர் எடுத்துரைத்து அறிந்து வளர்ந்தவன் அதனால் எனக்குள் ஏற்பட்ட பற்றால் நான் இன்று ஐயா காமராஜர் பயன்படுத்திய காரை எடுத்து வந்து புதுப்பொலிவு ஆக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரசு பள்ளிக்குள் புகுந்து அட்டூழியம்: மதுபோதையில் புத்தங்களை எரித்த இளைஞர் கைது!